செவ்வாய், 15 மார்ச், 2011


மட்டக்களப்பு பதுளை வீதியில் (ஏ5) உள்ள செங்கலடி கறுத்தப் பாலம் இன்று இரண்டாக பிளந்துள்ளது. இதனால் மட்டக்களப்பு பதுளை கரடியனாறு புல்லுமலை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இப்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 100 வருடங்கள் பழமை வாய்ந்தாகும்.

கிழக்கு மாகாணத்தின் சீன நிறுவனத்தினால் வீதிகள், பல பாலங்களும் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் இப்பாலத்திற்கு இப்போதைக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாது என பொறியலாளர்கள் தெரிவித்ததனால் இப்பாலத்திற்கான வேலைகள் மாத்திரம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இப்பிரதேசம் வயல்கள் நிறைந்து காணப்படுவதனால் பெரும்பாலான விவசாயிகள் இப்பாலத்தினையே பயன்படுத்தி வருகி்ன்றனர். அது மாத்திரமில்லாமல் பிரதேச மாணவர்களும் இப்பாலத்தைப் பயன்படுத்துவதனால் பாலம் பிளவுபட்டுள்ளதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களில் இருந்து எஞ்சிய வயல்களின் அறுவடை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்பாலத்தின் இணைப்புப் பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளதானது இப்பிரதேச விவசாயிகள் மத்தியிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பாலத்தினை விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக