திங்கள், 28 மார்ச், 2011

பணிப்புலம், காலையடி, காலையடி தெற்கு, சாந்தை
முன்னீடு
நீண்டகால யுத்தம் காரணமாக எமது பிரதேசங்கள் அபிவிருத்திகள் முடக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய பரிதாபகரமான நிலையில் இருப்பது சகலரும் அறிந்ததே. அபிவிருத்தியில் ஒரு நீண்ட பாச்சலை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது நமது பூமி. ஆற்றலும் அறிவும் மிக்க சமூதாயத்தை கட்டி எழுப்பாமல் இறக்குமதி செய்யப்படும் எந்தவித அபிவிருத்தியையும் சாத்தியமற்றதும் பயனற்றதுமாகும். எனவே ஒரு புதிய சமூதாயத்ததை கட்டியமைக்க தேவையான அக புற சூழலை உருவாக்குவதே இன்றைய தேவையாகிறது. இச் சமூக மேம்பாட்டு திட்டம் கிராமிய மட்டத்தில் நீண்டகால நோக்குடைய உறுதியான சமூகத்தை கட்டியமைக்க தேவையான வசதிகளை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. இது எமது கிராம மக்களுக்கு குறிப்பாக பணிப்புலம், காலையடி, காலையடி தெற்கு, சாந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.


இச் சமூக மேம்பாட்டுத் திட்டம் தாயகத்திலுள்ள கிராமங்களின் பொதுவான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டபடியால் இதை ஒரு மாதிரி அபிவிருத்தி திட்டமாகக் கொள்ள முடியும். இம் மாதிரி அபிவிருத்தித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாயகத்திலுள்ள மற்ற கிராமங்களும் தமது சூழல் வசதிகளுக்கேற்ப திட்டங்களை வகுத்துக்கொள்ள முடியும். 80களில்
நோக்கு
• சிறுவர்கள் தமது சுய ஆற்றலை அறிவை சகல துறைகளிலும் வளர்த்துக்கொள்ள வாய்பளித்தல்
• ஆரோக்கியமான சமூக பண்புகளை மீண்டும் கட்டியமைக்க தேவையான உள்கட்டுமானங்களை ஏற்படுத்தல்
• இளஞர்களின் எதிர்காலத்தை வளம்படுத்தக்கூடிய தொழில்களை அறிமுகம் செய்தலும் பயிற்சியளித்தலும்.
• சகல பருவத்தினரின் உடல் உள அபிவிருத்திக்கான விளையாட்டு மற்றும் களியாட்ட வசதிகளை ஏற்படுத்தல்.
• கலை இலக்கிய புத்தாக்க சிந்தனைகளை வளர்த்தல்.
• வயது முதிர்ந்தோருக்கு ஆரோக்கியமான அக புற சூழலை உருவாக்குதல்

செயல்த் திட்டங்கள்
1. விளையாட்டு
உதைபந்தாட்ட திடல்
சகல கட்டுமானங்களும் ஒரு உதைபந்தாட்ட திடலை சுற்றியே அமைக்கப் படும். திட்டத்தின் மையமான அமையும் விளையாட்டு திடல் சர்வதேச தரத்தில் தட கள விளையாட்டுகளும் உதைபந்தாட்டமும் நிகழக்கூடிய வகையில் விஸ்தீரிக்கப்படும். இது தற்போதுள்ள மடம் இடம் மாற்றப்பட்ட பின்னரே சாத்தியமாகும்.
இவ்விளையாட்டுத்திடல் பிராந்திய விளையாட்டுப் போட்டிகளை ஊக்கிவிப்பதோடு உள்ளுர் பாடசாலைகளின் மெய்வல்லுனர் போட்டிகளை வைப்பதற்கும் ஏதுவாக அமையும்.
சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்கப்படும்போதும் நட்புறவை வளர்த்தல் உடல உள ஆரோக்கியத்தை பேணுதல் என்ற விளையாட்டின் அடிப்படை நோக்கை நிறைவேற்றுவதே பிரதானமாகும்.
உள்விளையாட்டரங்கு
உடற்கட்டு விளையாட்டிற்கு ஏற்ற வகையில் அமையும் உள்ளரங்கில் மென்பந்தாட்டம், கரம், உடற்பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சிகளை பெறக்கூடியதாயிருக்கும். விளையாட்டு சம்பந்தமான பயிற்சிப் பட்டறைகளை நடாத்துவதற்கும் விளையாட்டுப் பொருட்களை சேகரித்து வைப்பதற்கு வசதிகளும் இங்கு அமைக்கப்படும்.
வலைப்பந்தாட்டம், தாச்சி
விளையாட்டுத்திடலின் ஒரு பகுதி வலைப்பந்தாட்டம் மற்றும் பாரமபரிய விளையாட்டுக்களான தாச்சி போன்றவற்றிற்கு ஏற்ற விதத்தில் அமையும்.
நீச்சல் தடாகம்
உடலிலுள்ள தசைநார்கள் எல்லாவற்றிற்கும் வேலை கொடுக்கும் ஒரேயோரு விளையாட்டு நீச்சலே என்பது உடற்பயிற்சியாளர்களின் அறிவுரை. அதனாலேயே அவுஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் நீச்சல் ஆரம்ப பாடசாலைகளில் கட்டாய பாடமாக்கப்பட்டள்ளது. எனவே சிறுவர்கள் நீச்சலை முறைப்படி கற்றுக்கொள்ள ஒரு நீச்சல் தடாகம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகிறது. இத்திட்டத்தின் நிறைவில் நீச்சல் கற்றுக்கொள்ள அபாயமமிக்க கேணிகளையோ கிணறுகளையோ கடலையோ நம்பியிருக்க வேண்டிய தேவையில்லை.
2. முன்பள்ளி
முன்பள்ளி எனப்படும் பாலர்பாடசாலை இன்றைய கல்வித்திட்டத்தில் மிக முக்கிய அம்சமாகிறது. ஒரு பிள்ளையினுடைய சமுக வாழ்க்கை இங்குதான் ஆரம்பிக்கிறது. பாதுகாப்பான பெற்றோரிடமிருந்து அன்னியமான புறச்சூழலுக்கு வரும் பிள்ளை மற்றவர்களுடன் சூழலுடன் ஏற்படுத்தப்போகும் தொடர்ப்பை தீர்மானிக்கும் இடமே முன்பள்ளி. எனவே அதன் அமைப்பும் சூழலும் பிள்ளையுடைய உளவளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைவது அவசியம்.
எமது கிராமங்களில் முன்பள்ளிக்கென வடிவமைக்கப்பட்ட இடம் கிடையாது. இத்திட்டத்தில் அமையவிருக்கும் முன்பள்ளியே அந்தவகையில் முதலாவதாகவிருக்கும். இந்த முன்பள்ளி இயற்கைச் சூழலுடனும் சிறுவர் விளையாட்டுத் திடலுடனும் இணைந்து பிள்ளைகளின் கற்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் அமையும்.
3 கலை கலாசாரம்
உள்ளரங்கு
திட்டத்தில் அதிக பொருட் செலவில் உருவாகும் உள்ளரங்கு நவீன வசதிகளை கொண்டிருக்கும். 300 பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய உள்ளரங்கு மேடை நிகழ்சிகள் கலாசார நிகழ்வுகளோடு திரைப்படங்களை பார்க்கக்கூடிய ஒலி ஒளி அமைப்புகளையும் கொண்டிருக்கும்.
நவீன வசதிகளை கொண்டிருக்கும் இவ்வரங்கு கருத்தரங்கங்கள் பட்டறைகள் விரிவுரைகள் நடாத்துவற்கு ஏற்றவிதத்திலும் அமைந்திருக்கும். இவ்வசதிகளைப் பயன்படுத்தி வீடியோ சினிமாக்கள் தயாரிப்பதும் ஊக்கப்படுத்தப்படும்.
திறந்தவெளியரங்கு
பாரம்பரியமான மேடைநிகழ்வுகளை செய்யக்கூடிய திறந்தவெளியரங்கு உதைபந்தாட்ட திடலைப் பார்த்தவண்ணம் அமைக்கப்படும். நவீன ஒலி ஒளியமைப்புக்களை கொண்ட இவ்வரங்கு ஆண்டுவிழாக்கள் விளையாட்டுப்போட்டிகள் நடாத்துவதற்கு ஏற்றவிதத்தில் அமைந்திருக்கும்.
4 கல்வி
கணணியகம், மொழிப்பயிற்சியகம்
பாடசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத நெறிகளை கற்கும்; வாய்ப்பு இந்தக் கல்விநிலையங்களில் வழங்கப்படும். குறிப்பாக கணனியியல் ஆங்கிலம் சிங்களம் உட்பட பிற மொழிப்பயிற்சி, கலை இலக்கியப் பயிற்சி இங்கு வழங்கப்படலாம். தேவைகளைப் பொறுத்து இது விஸ்தரிக்கப்படலாம்.
தொழில் பயிற்சியகம்
எமது பிரதேசங்களில் தொழில்பயிற்சி பெற்றவர்கள் அpக அரிதாகவே காணப்படுகிறார்கள். அனேகமான தொழில் செய்பவர்கள் அது சம்பந்தமான பயிற்சி எதுவும் இல்லாதவர்களே. மேலும் குடாநாட்டிலுள்ள அரச தொழிற் பயிற்சிக் கல்லூரிக்கு சென்று கற்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இத்தொழில் பயிற்சியகம் இளைஞர்களிடம் தொழிற்பயிற்சியில் ஆர்வைத்தை தூண்டுவதற்கும் வழிகாட்டுவதற்கும் ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.
நூலகம்
தற்போது உள்ள வாசிகசாலை அலுவலகமாகவும் அரும்பொருட் காட்சியமாகவும் மாற்றப்பட்டு சகல வசதியுடைய நூலகம் அமைக்கப்படும்.
5 ஆத்மிகம்
வளவின் மத்தியில் அமைந்துள்ள வெற்றிமடம் திட்டத்தின் முகப்பில் இடமாற்றப்படும். அபிவிருத்தித்திட்டத்தின் நுளையாயிலாக அமையும்; இவ்வமைப்பு திராவிடக் கட்டக் கலை வடிவில் தியானத்திற்கும் வழிபாட்டில்கும் ஏற்ற சூழலில் உருவாக்கப்படும்.
6 முதியோர் பராமரிப்பு
பாலர் பாடசாலைக்கு அருகில் முதியோர்கள் உள உடல் ஆரோக்கியத்தை பேணும் வசதிகள் உள்ள முதியோர் இல்லம் அமைக்கப்படும்.
நிறைவு
இத்திட்டம் தற்கால உலகஒழுங்கில்; வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள மக்களுக்கு ஈடுகொடுத்து எமது தாயக மக்களும் முன்னேறக்கூடிய வாய்ப்புக்களை வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது. இதன்மூலம் மேலைநாட்டு மோகம் தணிக்ப்பட்டு எமது பிரதேசங்களும் மேலைநாடுகளுக்கு இணையாக அல்லது அதற்கு மேலாக வளரும் நிலை ஏற்படலாம். ஏற்படவேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக