செவ்வாய், 10 மே, 2011

11:30
உலகில் உள்ள சைபர் குற்றவாளிகளின் அடைக்கல பூமியாக கனடா மாறிவருவதாக அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க இணையத்தள பாதுகாப்பு நிறுவனமான வெப்சென்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள் கிழமை வெளியிடப்பட்டன.

சட்டத்தை மதிக்கும் நாடு என்ற கீர்த்தியைப் பெற்ற கனடா, இன்று சைபர் குற்றவாளிகளின் முன்னுரிமைத் தளமாக மாறியுள்ளது.

சைபர் குற்றங்கள் புரியப்படும் உலக நாடுகளின் வரிசையில் கனடாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கனடா இந்த விடயத்தில் 13வது இடத்தில் இருந்தது.

வெப்சென்ஸ்ஸின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பெட்ரிக் ருனால்ட் இது பற்றி கூறுகையில், சைபர் குற்றங்கள் புரியப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார்.

இணையத்தள வலையமைப்புக்களைப் பாவித்து இடம்பெறும் குற்றச் செயல்களே சைபர் குற்றங்கள் எனப்படுகின்றன. கம்பியூட்டர் பாவனையாளர்களின் கடவுச் சொற்களைத் திருடுவது, தேவையற்ற விடயங்களைத் தரவிறக்கம் செய்ய பாவனையாளர்களைத் துண்டுவது, பாவனையாளர்களின் நிதி விவரங்களைத் திருடுவது, அவற்றை மோசமாகப் பயன்படுத்துவது உட்பட பல விடயங்களை இதில் பட்டியலிடலாம்.

இத்தகைய குற்றச் செயல்களைப் புரிபவர்கள் கனடாவை ஒரு தளமாகப் பயன் படுத்துவது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றது.

அமெரிக்க சமஷ்டி பலனாய்வுப் பிரிவினர் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக அண்மைக் காலங்களில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக, அங்கிருந்து செய்றபட்ட பலர் அண்மையில் கனடாவுக்குள் புகுந்து செயற்படத் தொடங்கியுள்ளனர் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக