வெள்ளி, 16 டிசம்பர், 2011

கனடா, மார்க்கம் நகரசபை தைப்பொங்கல் பண்டிகையை தமிழர் பாராம்பரிய விழாவாக அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பு

கனடாவில் உள்ள மிகப்பெரிய மார்க்கம் மாநகர சபை ஒவ்வொரு வருடத்திலும் வரும் தை 13ம், 14ம், 15ம் திகதிகளை தமிழர்களின் பாரம்பரிய நாட்களாகவும் தைப்பொங்கல் பண்டிகையை  பாரம்பரிய விழாவாகவும் அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் பண்டிகையையும் அதனோடு சார்ந்த நாட்களையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த மாநகர சபை என்ற பெருமையை மேற்படி மார்க்கம் நகர சபை பெற்றுள்ளது.
இவ்வாறு தைப்பொங்கல் திருநாள் மற்றும் அதனோடு சார்ந்த தை 13ம், 14ம், 15ம் திகதிகளை மேற்படி மாநகர சபை அதிகாரபூர்வமான அங்கீகரிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் பலர்.
அவர்களுள் முதன்மையானவர் மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டார அங்கத்தவரும் மார்க்கம் நகர சபையின் மேயர் உட்பட அனைத்து அங்கத்தவர்களினதும் நன்மதிப்பைப் பெற்ற திரு லோகன் கணபதி என்றால் அது மிகையாகாது.
அத்துடன் மேற்படி நல்லதோர் திட்டத்தை அறிமுகம் செய்த மார்க்கம் நகரத்தின் தமிழர் அமைப்புக்களை நாம் மறந்து விடக்கூடாது.
அவையாவன:- மார்க்கம் தமிழர் சங்கம், சீடர்வூட் தமிழ் பேசும் வரியிறுப்பாளர்கள் சங்கம், மற்றும் மார்க்கம் நகரத்தின் தமிழ் மூத்தோர் சங்கம் ஆகியவையாகும்.
மேற்படி அமைப்புக்கள் கடந்த 2 வருடங்களாக நகர சபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி ஊடாக மார்க்கம் மாநகர சபையின் மேயருக்கும் அதன் நிர்வாகத்திற்கும் கொடுத்துவந்த அழுத்தம் காரணமாகவே இந்த நல்லதோர் பலன் கிட்டியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கனடாவில் நமது தமிழ் மக்களுக்கு ஒரு உயர்ந்த அங்கீகாரமும் கிட்டியுள்ளது.
மார்க்கம் மாநகர சபையில் கடந்த வாரம் நடைபெற்ற விசேட கூட்டத்தில் மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி மேற்படி தீர்மானத்தை முன்மொழிய கனடிய வெள்ளை இனத்தவரான மற்றுமொரு நகர சபை அங்கத்தவர் திரு கொலின் கெம்பல் (ஊ ) அதனை ஆமோதித்தார்.
அதனை மாநகரசபையில் மேயர் உட்பட அனைத்து அங்கத்தவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
எனவே ஏகமனதாக தமிழர் பாராம்பரிய நாட்கள் மாநகரசபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து சபையில் உரையாற்றிய திரு லோகன் கணபதி தைப்பொங்கல் பண்டிகையின் பெருமையினை ந்னகு விளங்கப்படுத்தினார்.
தை மாதத்தில் வரும் 13ம், 14ம் 15ம் திகதிகளில் நமது தாயகத்திலும் இந்தியாவிலும் தமிழ் மக்கள் பொங்கல் திருநாளை கொண்டாடுவார்கள். இது ஏன் என்றால் தங்களுக்கு நெற்பயிரை நன்கு விளையச் செய்து நல்ல அரியை எங்களுக்கு தந்துள்ள சூரியனுக்கும் பசுக்கள் போன்ற மிருகங்களுக்கும் நன்றி செலுத்துவதற்காகவே தமிழ் மக்கள் மேற்படி பொங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.
அத்துடன் தை மாதத்தை நமது தமிழ் மக்கள் ஒரு புனிதமான மாதமாகவே கணிப்பதுண்டு. என்றார்.
அத்துடன் அவர் மேலும் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில் மார்க்கம் மாநகர சபையின் மேயரும் ஏனைய அங்கத்தவர்களும் எப்போதுமே பல்லின மக்களின் நலன்களைப் பேணுவதிலும் அந்த மக்களை மதிப்பதிலும் முன்னிற்பவர்கள்.
எமது தைத்திருநாளை தமிழ் மக்களின் பாராம்பரிய பண்டிகையாக கனடாவின் மார்க்கம் நகரசபை அங்கீகரித்திருப்பது என்பது ஒரு சாதாரண விடயமல்ல. இன்றைய நாள் கனடாவின் தமிழர்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாளாகும்.
இந்த நல்ல ஒரு பணியை முன்னெடுப்பதில் எனக்கும் பங்களிக்க கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நான் மார்க்கம் நகரத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
மேற்படி மார்க்கம் மாநகர சபையின் தீர்மானத்தை வரவேற்று கருத்து வெளியிட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் உலகத் தமிழர்களை மீண்டும் ஒரு தடவை தலை நிமிரச் செய்துள்ள கனடாவின் மார்க்கம் மாநகர சபைக்கும் அதனை செயலூக்கம் செய்து எங்களுக்கு அளித்து மாநகர சபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களுக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர் நாயகம் என்ற வகையில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தமிழர் பாரம்பரிய நாட்களை வருடந்தோறும் கொண்டாடுகின்ற குழுவின் பொறுப்பாளர் திரு நீதன் சண்முகராஜா தனது பாராட்டுக்களை மார்க்கம் நகரசபைக்கும் அங்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் திரு லோகன் கணபதிக்கும் தெரிவித்துள்ளார்.
 கனடாவில் தமிழ் மொழியும் தமிழர்களின் பண்பாடும் கலாச்சாரமும் வேற்று இன மக்களாலும் ஒரு அதிகாரமிக்க உள்ளுராட்சிச் சபையாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் மகிழச்சி கொள்ளச் செய்கின்றது என்றும் திரு நீதன் சண்முகராஜா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக