சனி, 21 ஏப்ரல், 2012

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய புனர்நிர்மாணப்பணி - சமகால நிலை
அம்பிகை அடியார்களுக்கு வணக்கம்,


எம் எதிர்கால சந்ததியின் சமூக நாகரிக வளர்ச்சியின் ஆதாரமாக நிற்கக்கூடிய பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம், தற்கால சிதைவுகளிலிருந்து புனரமைக்கப்பட்டு, அதன் முழுவலுதிறனில் கண்ணியத்தோடு இயங்கும் அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து  நிற்கும் இவ்வேளை, சமகால நிலைமைகளை உள்ளடக்கி  இம்மீளறிக்கை  சமர்ப்பிக்கப்படுகிறது.

தெய்வ வழிபாட்டோடு மட்டும் நின்றுவிடாது சமூக ஒழுங்கியல் மேம்பாடு எனும் உயரிய பணியோடு பின்னிப்பிணைந்தது தான் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் என்பதனை வரையறுத்துக் காட்டக்கூடியவாறு, ஆலய வீதியில் தென்கீழ் மூலையில் அமைந்திருக்கும் அம்பாள் சனசமூக நிலையம், கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேல் எம் வாழ்வில் மறக்க முடியா பல நினைவுகளோடு கலந்து நிற்கிறது.

தொழில் நுட்ப உலகின் வரவேற்கத்தக்க வளர்ச்சின் ஒரு படியாக இணையப் பக்கங்கள் பலதேசம் பரந்து வாழும் எம் உறவுகளை இணைத்திருக்கும் இவ்வேளை, அம்பாள் சனசமூக நிலைய தற்கால  சிதைவுகளை  சீர்படுத்தி மீளமைப்பு செய்வது தொட்டு பலவகை தகவல்கள் இணையப்பக்கங்கள் மூலம் பரவ விடப்பெற்றாலும், தோற்றுவிக்கபடும்  உண்மைக்கு மாறான தகவல்களின் குறுகிய நோக்கங்கள் கண்டிக்கத்தக்கவை.  கோவிலுக்குள் இருப்பது எம்பெருமாட்டி அம்பிகையல்ல வெறும் கருங்கல்லு என்று நாத்திகம் வழி நிந்திப்பவர்கள் ஆலய குருக்களை நித்திப்பதனை வெகு பாரதூரமாக பார்க்கவேண்டியதில்லை.  ஒரு சில வகுப்பற்ற மனிதர்கள், மீண்டும் ஒருமுறை ஆலயம் பற்றிய பேச்சுக்களோடு நிலைமைகளை சிக்கலாக்கி, ஆலயம் பூட்டப்பெற்றிருந்த அந்த இருண்ட காலத்திற்கு அழைக்கும் அறை கூவலை விடுத்த வண்ணம் உள்ளனர்.  இது மனம் வருந்தக் கூடிய செயல்.  கோவிலுக்காக முப்பது வருடங்களுக்கு மேலாக வழக்காடி, இலங்கை உச்ச நீதி மன்றத்தால் பெற்றெடுத்த தீர்ப்பின் பிரகாரம் ஆலயம் மீண்டும் எமது பரிபாலனத்தில் வந்தது
என்பது விபரமறிந்த யாவரும் அறிவர்.
அன்றிலிருந்து, செய்யக்கூடிய ஒவ்வொரு பணிகளும் சிவாகம முறைப்படி அமைத்து ஆலயத்திற்கும். ஊருக்கும் கீர்த்தி சேர்க்கும் பணி எம்மாலான வரை செய்யப்பெற்று வருகிறது.  இதற்கு ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் பெருகி வரும் அடியார்கள் வரவும் ஆலயத்தின் மெருகேறிவரும் எழில் தோற்றமும் சான்றாகும்.  ஆலய முன் பிரகாரத்தில் கம்பீர தோற்றத்துடன் எழுப்பப்பெற்றிருக்கும் கோபுரமும் எம் ஆலய வளர்ச்சிப் பாதைக்கு கட்டியங்கூறி நிற்கிறது. இப்பாரிய பணி குறிக்கப்பெற்ற காலவரையறைக்குள், மக்களின் அமோக வரவேற்புடன் கட்டி எழுப்பப்பெற்றிந்தது  என்பதனையும் இத்தருணம் நினைவு கூரலாம்.  இந்த அளப்பரிய பணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பெற்றவர்களான திரு இ பாலசுப்பிரமணியம், திரு பொ. சூரசங்காரன், திரு இ சிவபாதம் உள்ளடக்கிய பலர் இணைந்த குழுவின் (முழு உறுப்பினர் வரைபை கோபுர அறிக்கையில் காணலாம்) செயல் திறன் இங்கே பாராட்டப்பெற வேண்டியதொன்றாகும்

கோபுரம் போன்ற அளப்பரிய விடயங்கள் மக்களின் அமோக ஆதரவோடு கட்டி முடித்த செயலோடு ஒப்பிடுகையில், சனசமூக நிலைய கட்டிட
த்தின் மீள் புனரமைப்புப் பணி ஒரு சொற்பமே.  இருந்தும், இதனை மீள் புனரமைப்பதாக முன்வந்தவர்களில் ஒரு சிலரின்
அளப்பரை, மக்களை  கூறுபடுத்திகொண்டாடுவதே முன்னோக்காக கொண்டது என்பதனைஎடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
அம்பாள் சனசமூக நிலைய கட்டிடம் பழுதடைந்திருந்த போதிலும் 2010 ம் ஆண்டுவரை அதனை திருத்தி அமைப்பதற்கு அப்போதிருந்த சனசமூக நிர்வாகம் முன்வராத காரணத்தினால், நாம் முன்னின்று, பொதுக்கூட்டம் கூடி பொது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட புதிய நிவாகத்துடன் இணைந்து அதனைச் திருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம்.  ஆனால் அதனைச் செய்ய ஆரம்பிப்பதற்கு முதல் சனசமூக நிலைய பழைய நிர்வாக உறுப்பினர் முன்வந்து திருத்தப் பணிக்கு வெளிநாடுகளில் இருப்போரிடம் பணம் சேகரித்தமையால், அப்பணியை சனசமூக நிலைய நிர்வாகப் பொறுப்பிற்கு விடப்பெற்றது.
அம்பாள் சனசமூக நிலைய கட்டிடம் ஆரம்பத்தில் இருந்ததுபோல் திருத்தி அமைப்பதற்கு நாம் எதுவித நிபந்தனைகளும் முன்வைக்கவில்லை என்பதனை பலமுறை தெளிவுபடுத்தி இருந்தும், குழப்பதாரிகளின் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள் குறைந்த பாடில்லை.  மீள் புனரமைப்பில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் சகல உதவிகளையும் செய்து இப்பணியை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்பதனை  மீண்டும் வலியுறுத்திக்கூறுகிறோம்.
பழையன பேணப்பட வேண்டும் என்பதும், ஊரின் முனேற்றம் கருதி புதியன புகுத்தப்பட வேண்டும் என்பதும் எல்லோரினதும் ஆதங்கம். எம்முன்னோர் எம் மக்களுக்காக சுமார் 60 வருடங்களுக்கு முன் பலசிரமங்களுக்கு மத்தியில் அமைத்த அந்த தோற்றம் கொண்ட கட்டிடம், எம்மூரின் அடையாளச் சின்னமாக அமைந்து வருங்கால சந்ததினரும் அதனைக் கண்டு பெருமைப்பட வேண்டும் என்பது எம்மைத்தொடர்பு கொண்ட பலரினதும் வேண்டுகோள்.  இதனை நாம் சனசமூக நிலைய அங்கத்தினரின் கவனிப்பிற்கு விட்டு விடுகின்றோம்.
சனசமூக நிலைய கட்டிடத்தில் தெற்கு பக்கமாக  அமைந்திருக்கும் படிகளை வடக்குப் பக்கமாக அமைப்பதற்கு ஆலய வீதியில் உள்ள மேலதிக நிலம் தேவைப்படுகின்றது.  ஆலய முன் வீதியில் திருவிழாக்காலங்களில் மக்கள்  இளைப்பாறும் முக்கியமான இடமாக அமைந்து சனநெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையிலும், சனசமூக நிலையத்தின் முனேற்றம், பணி, பொதுமக்களின் உயற்சியை கருத்திற் கொண்டு  இதனை  அமைப்பதற்கு  சம்மதம் தெரிவித்திருந்தோம்.  
இத்தருணம், மீண்டும் ஒரு விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டியதாகிறது.  வாசிகசாலை ஏற்கனவே இருந்த மாதிரியே திருத்தி அமைப்பதற்கு நாம் வாடகை, ஒப்பந்தம் என்று எதுவும் கோரவில்லை என்பதோடு, சனசமூக நிலையப் படிகளை இடம்மாற்றி வடக்குப்புறம் அமைக்கும் பட்சத்தில் ஆலயத்தின் மேலதிக நிலமும் பெறப்படவேண்டி இருப்பதனால், மேலதிகமாக ஆலய நிலம் வழங்கப்பெறுவதன் அடையாளமாக வாடகைப் பணமாக வருடம் ஒன்றிற்கு சொற்ப தொகை பத்து ரூபா ஆலயத்திற்கு செலுத்தும்படி சனசமூக நிர்வாகத்தினரை கோரியிருக்கின்றோம்.  இதனை, வேறு விதமாக கூறுவதாயின் ஆலயத்தின் சொத்தை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பில், இவ்வகையான அணுகுமுறையும் ஒரு காலத்தின் தேவையே.  அத்துடன் கடந்த காலங்களில் பின்பற்றியதுபோல் ஆலய விழாக் காலங்களில் ஆலய வீதியையை இடையூறு செய்யா வண்ணம் வாசிகசாலை நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆலய வீதியை வாசிகசாலை நிகழ்வுகளுக்கு பாவிக்க வேண்டிய சந்தர்பத்தில் ஆலய விழாக்களுக்கு  இடையூறாக இருக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் பொருட்டு எங்களுக்கு முன்கூட்டியே அறியத்தரும்படியும் கூறியுள்ளோம்.

கடைசி விடயமாக ஆனால் முக்கியமானதொன்றாக, ஊர் சிறார்களின் முன்னேற்றம் கருதி, ஆலயத்திற்குச் சொந்தமான அன்னதான மடத்தை சிறுவர் பாடசாலைக்காக அன்னதானம் நடைபேறாத காலங்களில் வழங்குவதாக முன்பே அறிவித்திருந்தோம் என்பதனை மீண்டும் நினைவுபடுத்துகிறோம். அங்கு சிறுவர் பாடசாலைக்கு ஏதுவான, சிறுவர்களின் பாதுகாப்பு, விளையாட்டு, மலசலகூட வசதி, மின்சார வசதி, தண்ணிர் வசதிகள், போன்றன அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கவை.

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய புனர்நிர்மாணத்திர்கான எம் ஆதரவை, வில்லங்கப்படுத்தி, உண்மைக்கு புறம்பான, திரிவுபடுத்தி பிரசுரமாகும் தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களை மீண்டும் கண்டிப்பதோடு, உண்மைகளை உறவினர் மூலமோ நேரடி அழைப்பு மூலமோ கண்டறிந்து  கொள்ளுமாறு மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  காலம் காலமாக ஒரு சில இணையங்களில் வெளியிடப்பட்ட சோடிக்கப்பெற்ற பல தரவுகள் ஊரை ஒட்டிய விடயங்களில் பாரதூர விளைவுகளை சமைக்கும் காரணியாக இருந்ததை நாம் கண்டோம்.  இப்படியான தகவல்களை உற்பத்தி செய்வோரை அடையாளம் கண்டு அவர்களை மக்கள் சமூக முன்னேற்றப்பாதைகளிருக்கும் முட்களாக கருதி புறந்தள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்புனர்நிர்மணப் பணியை உயரிய நோக்காக கருதி, ஒற்றுமையான சூழலில் அதனை செயல்படுத்த, அனைவரைக்கும் அழைப்பு விடுக்கிறோம்.  முன்னேற்றப்பாதையில் செல்ல, புனர் நிர்மாணப்பணியை தாண்டி  பல பணிகள் எம் முன்னே நிற்பதால், இங்கே முரண்பட்டு பிணக்குகளில் தொடர காலமில்லை.  ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதற்கமைய, ஒற்றுமையான செயல்பாடுகள் மூலம் ஊரை உயர்த்துவோம், வாரீர்.

அனைவருக்கும் எல்லாம் வல்ல எம்பிராட்டியின் அருட்கடாட்சம் கிடைக்கப்பெற்று நலமாகவும் மகிழ்வோடும் வாழ்க என வாழ்த்தி விடைபெறுகின்றோம்.

-பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய தர்மகர்த்தாக்கள்
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக