வெள்ளி, 13 ஏப்ரல், 2012

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய புனருத்தாரண பணி குழப்ப நிலை - எதனால்?பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தினை இன்றைய இடிபாடுகளோடு விட்டுவிடாது, அதனை திருத்தி, தற்காலத்திற்கேற்ப  மெருகேற்றுவதற்கு முன்வந்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களிற்கும் முதற்கண் வணக்கங்கள்.  இவ்வுன்னத பணிக்கென உவந்தளித்த கொடைப் பெருந்தகைகளுக்கு, அனைத்தும் பொருந்திய எம்பெருமாள் முத்துமாரி அம்மனின் அருட்கடாட்சம் கிடைக்கப் பெற்றுய்வதாக!
சனசமூக நிலைய செயற்பாடுகள் எவையென்றாயினும், அது அமைந்திருக்கும் சுற்றடலின் நிலமைக்கொவ்வ, காலகாலமாக குறிப்பிட்ட ஒரு ஒழுங்கு முறைகளிலேயே நடைபெற்று வருகிறது.  நாட்டின் அசாத்திய சூழ்நிலைகளின் போது, இந்த ஒழுங்குகளில் ஒரு சில மாறுதல்கள் இருந்திருப்பினும், அடிப்படையில் இதன் செயற்பாடானது அதன் சாரார் சரத்திற்கேற்பவே கொள்ளப்பட வேண்டியது.  இதுவே ஆரம்ப காலம் தொட்டு பேணப்பட்டதொன்றாகும்.
இருப்பினும், தற்கால இளைய சமுதாயத்தினரையும், வரலாற்றினை சரியாக அறிய சந்தர்ப்பம் இல்லாதவர்களையும் திசை திருப்பும் வகையில், உண்மைக்குப் புறம்பான, சோடிக்கப்பெற்ற  பலவித  தகவல்களை ஆங்காங்கே பரவவிட்டு, ஊரை கூறுபடுத்தி கொண்டாட ஒரு சிலர் முனையும் இவ்வேளை, இவ்வறிக்கை மூலம் சில விபரங்களை தெளிவுபடுத்தலாம் என்பது உத்தேசம்.
அம்பாள் சனசமூக நிலைய கட்டிடம், பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான வெளிப் பிரகாரத்தின் தென்கீழ் மூலையில் இரண்டு மாடிகளுடன் அமைந்திருக்கிறது.  இக் கட்டிடத்தை ஆலய வளாகத்தில் கட்டுவததற்கு அப்போதய சிரேஷ்ட ஆதீனகர்த்தாவாக இருந்த சிவஸ்ரீ. சுப்பையா அவர்கள் அனுமதி வழங்கி இருந்தமை வரலாறு தெரிந்த யாவரும் அறிந்த விடயமாகும்.
அன்றுமுதல், இக்கட்டிடம் அமைந்துள்ள நில வாடைகையை ஊரில் இருக்கும் பெரியார் க. தம்பையா ஆசிரியர் உட்பட பல பெரியோர்கள் ஆலயத்திற்கு மாதந்தோறும் செலுத்தி வந்தமையும் ஆதாரங்களுடன் நிரூபிக்கக்கூடிய ஒன்று.  ஆலயவளாக வழக்கின் படி, ஆலய வளாகத்தில் இருக்கும் அசையும் அசையாச் சொத்துக்கள் யாவும் ஆலயத்திற்கே சொந்தமாகும். அதனை நல்ல முறையில் பரிபாலனம் செய்யும் அதி முக்கிய கடமை ஆலய தர்மகர்த்தாக்களாகிய எமதாகிறது.
இந்நாளில், ஊரில் உள்ள புத்திஜீவிகள் (சட்டவல்லுனர். சோ. தேவராசா அவர்கள் உட்பட) பலர் எம்மிடம் வந்து பழுதடைந்துள்ள சனசமூக கட்டிடத்தை திருத்துவதற்கான அனுமதியை கோரியிருந்தனர்.  மிகவும் வரவேற்கத்தக்க இச் செய்திதியில் பூரிப்படைந்து, அதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டதோடல்லாது அதற்கான எம் முழு ஆதரவினையும் தெரிவித்திருந்தோம்.
அத்தோடு, காலகாலமாக தழுவப்பெற்ற வழக்கிற்கு அமைய, கட்டிட வாடகைப் பணமாக இலங்கை நாணயப்படி வருடம் ரூபா 500 (மாதம் சுமார் 41 ரூபாய்) ஆலையத்திற்கு செலுத்தும்படியும், அதற்கான பொறுப்பை அம்பாள் சனசமூக நிலையம் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் தலைவரும், செயலாளரும் கையொப்பம் இடவேண்டும் எனவும் கேட்டிருந்தோம். அதற்கு அவர்ககளும் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.
மீள்   திருத்தப் பணியின் ஒரு அங்கமாக கட்டிட மேல்மாடிக்கு செல்லும் படியை முன்பக்கமாக ஏறக் கூடியதாக அமைப்பதற்கும் அவர்கள் எங்களிடம் அனுமதி கோரியிருந்தார்கள்.  அதற்கு நாம் சம்மதம் தெரிவித்ததோடல்லாது கட்டிடத்தின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் படியை மீள்கட்டுவதற்கு ஏதாவது தடங்கல் இருந்தால், வடக்குப்பக்கமாக மூன்று அடி அகலத்திற்கு மேற்படாத இடத்தில் மாற்றி அமைப்பதற்கும் உடன்பட்டிருந்தோம்.  இது ஊரில் பலபேர் முன்னிலையில் நிகழ்ந்த நிகழ்வு.
இதற்கு பின்னர், கடந்த 6ம் திகதி அவசர அவசரமாக வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களுடன் வந்து எமக்கு ஒரு கடித்தினை கையளித்திருந்தனர். அதில், முன் ஒப்புக்கொண்டது போலல்லாது, 'திருப்பணி'க்காக வருடம் ரூபா 500 ஆலயதிற்கு வழங்குவதாக எழுதப்பெற்றிருந்தது.  அதனை 'வாடகை'ப் பணம் என மாற்றித் தரும்படி கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இவ்வகை அவர்கள் நிலைப்பாடானது ஆலைய சொத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.  அவ்வகை உள்நோக்கம் கொண்ட எந்த ஒரு ஏற்பாட்டிற்கும் இடமளிப்பது ஆலய சொத்துக்கள் சூறை ஆடுவதற்கு இடம் கொடுத்தது போலாகிறது.  ஆலய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை.  இவற்றை பாதுகாக்கும் பொருட்டு, வேண்டிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் நாம் ஆலோசனை பெற்றுள்ளோம்.
அண்மைக்காலத்தில் ஒருசாரார், தமது நிலத்தில் வாசிகசாலையும் ஆலய வீதியும் அமைந்திருப்பதாக ஊர்மக்களை குழப்பிவிடும் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர்.  இது பாரதூரம் அறியா அறிவிலர் செய்யும் அவச்செயல்.
இந்நிலையம் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளமையை ஏற்காத, அதற்கான வாடகைப் பணம் செலுத்த முன்வராத பொறுப்பற்ற தன்மையால், புனருத்தாரண பணிகள் தடைப்படுகின்றது.  உண்மையை வரலாறு அறிந்த பெரியார்களிடம் கேட்டறிந்து, புனருத்தாரண பணிகளை மேற்கொண்டு நடாத்த முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உண்மையான நிலைகளை கண்டறியாது, ஒரு சிலர் கட்டவிழ்த்து விடும் வதந்திகளை நம்பி, அதனை மீள்பிரசுரம் செய்யும் இணையங்களுக்கும், உண்மையை விளங்காது கருத்துகளை முன்வைக்கும் அவசர நோக்குடையவர்களுக்கும், இந்த அறிக்கை சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக