ஞாயிறு, 22 ஜூலை, 2012

வடக்கில் நாகரீகமாக உடையணிந்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இளைஞர் கூட்டம்! ஏமாந்த மாதகல் மக்கள்வடக்கில் மிகவும் நாகரிகமாக உடையணிந்து வரும் இளைஞர்கள், போரில் கணவன்மார்களை இழந்த பெண்களுக்கு நிதி சேகரிக்கும் தோரணையிலும் அநாதைப் பிள்ளைகளுக்கு உதவுதல், வலுவிழந்தோருக்கு நிதி சேகரிப்பு என்று பல்வேறு காரணங்களைக் கூறி வீடு வீடாகச் சென்று பணத்தை வசூலித்துக் கொண்டு மறைந்து விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் வடக்கில் இப்போது நாளாந்தம் நடந்து வருகின்றன. யாழ்ப்பாணம், மாதகல் கிழக்கு கோணாவளையில் நடந்த சம்பவம் இது தான்:
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் "ரை'' அணிந்து வந்த ஒரு "ரிப்டொப்' இளைஞன், கணவன்மார்களை இழந்த பெண்களுக்கு உதவிகளை வழங்குவதற்கென நிறுவனமொன்றின் சார்பில் வந்ததாக கூறித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வெகு சாமர்த்தியமாகப் பேசி பணத்தைச் சுருட்டிக்கொண்டு பறந்து சென்றுவிட்டான்.
வந்த இளைஞன் கடற்கரையோரமாக மீளக்குடியமர்ந்த மிகவும் ஏழ்மையான மக்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளான்,
தன்னை நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி என்று அறிமுகம் செய்துகொண்டு தான் சார்ந்துள்ள நிறுவனம் கணவன்மார்களை இழந்த பெண்களுக்கும் மீள்குடியமர்ந்த மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கவுள்ளதாகக் கூறி அங்குள்ளவர்களின் விவரங்களையும் பதிவுசெய்து கொண்டான்.
அதன்பின்னர் உதவிகளுக்கான நிதியை வங்கியில் வைப்புச் செய்யும் பொருட்டு கணக்குப் புத்தகங்களையும் திறக்கவுள்ளதாக கூறியுள்ளான். அவனது பேச்சு நடிப்பை அப்பகுதி மக்கள் நம்பிவிட்டனர்.
சிலர் அவனைப் பார்த்து "வழக்கமாக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வாகனங்களிலேயே வருவார்கள் நீங்கள் வந்த வாகனம் எங்கே?'' என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு அந்த இளைஞன் "நீங்கள் இருக்கின்ற இந்த இடத்துக்கு எல்லாம் வாகனங்களை எடுத்துவர முடியாது. அதனால் வீதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன் என்று இடக்காகப் பதில் கூறியுள்ளான்.
அங்குள்ள மக்களும் மேற்கொண்டு கேள்வி கேட்காது உதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தமது வசதிக்கு ஏற்றவாறு கையில் இருந்த ஆயிரம், ஐந்நூறு என்று பணத்தை இளைஞனிடம் கொடுத்துள்ளனர்.
“விரைவில் வருவேன்” என்று கூறிச்சென்றவரை இன்னமும் காணாது பணம் கொடுத்த மக்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
இதேவேளை வாகனத்தை வீதியில் விட்டுவிட்டு வந்ததாகக் கூறிய அந்த இளைஞன் பஸ்ஸில் வந்து இறங்கியதை அங்குள்ள சிலர் கண்டனர் என்று கூறப்படுகின்றது.
யுத்தத்தால் பல சொத்துக்கள், உடமைகள் என எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் எமது மக்களிடம் எவ்வாறெல்லாம் சுரண்ட முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் சுரண்டல்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மக்கள் விழ்ப்பாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக