செவ்வாய், 4 செப்டம்பர், 2012

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பர்மியூடா முக்கோண’ மாய மறைவுகள்- பாகம் -2
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?” என்று விமானத்தில் இருந்து வந்த ரேடியோ மெசேஜ்,  தரையில் இருந்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.
திசைகூடத் தெரியவில்லையா?
விமானங்கள் காலையில் தரையில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவற்றில் கோளாறுகள் எதுவுமில்லாமல் இருந்தன என்று மெக்கானிக்குகள் பரிசோதித்து கிளியரன்ஸ் கொடுத்திருந்தார்கள். அன்றைய தினத்தில் வானம்கூட முகில்கள் அற்று கிளியராக இருந்தது. மோசமான காலநிலை இல்லை. இரவு நேரம் அல்ல.
அப்படியான சூழ்நிலையில் விமானிக்கு மேற்கு எந்த பக்கத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை என்றால், அவர்களால் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்றும் அர்த்தமாகின்றது.
வானம் தெளிவாக இருக்கும்போது, இது எப்படிச் சாத்தியமாகும்?
விமானங்கள் புறப்பட்டுச் சென்ற நேரம், வேகம், ஆரம்ப திசை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த விமானங்கள் கிட்டத்தட்ட எந்த வான் பகுதியில் பறந்து கொண்டிருக்கலாம் என்பதை தரையிலிருப்பவர்களால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
அந்த வான்பரப்பு -
பர்மியூடா முக்கோணத்தின் மேலுள்ள வான் பகுதி!
எங்கேயிருக்கின்றது இந்த அபாய முக்கோணம்?

உலக வரைபடத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து பர்மியூடா தீவுக்கு ஒரு கோடு கீறுங்கள். பர்மியூடா தீவில் இருந்து போட்டோ ரிக்கோ தீவுக்கு மற்றுமோர் கோட்டைக் கீறுங்கள். இறுதியாக போட்டோ-ரிக்கோ தீவிலிருந்து மற்றுமோர் கோடு கீறவேண்டும்.
இந்த மூன்றாவது கோடு போட்டோ ரிக்கோவிலிருந்து பகாமாஸ் தீவின் ஊடாக மறுபடியும் புளோரிடாவை தொடவேண்டும்.
கீறப்பட்ட மூன்று கோடுகளும் ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன அல்லவா. அதுதான். பர்மியூடா முக்கோணம் என்று அழைக்கப்படும் மர்மப் பிரதேசம். இந்தச் சிறிய கடற்பகுதியில்தான் கடலிலும் வானிலும் திடீர் மறைவுகள் பல ஏற்படுகின்றன.
அபாய முக்கோணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த 5 விமானங்களும் இப்போது மற்றுமோர் சிக்கலைச் சந்திக்கத் தொடங்கின. தரையுடன் அவர்கள் வைத்திருந்த ரேடியோ தொடர்புகள், சத்தம் குறைவாகவும், தெளிவில்லாமலும் போகத் தொடங்கின.

ரேடியோ தொடர்பில் வேறு சில ஒலிகளும் இடையூறு செய்ய தொடங்கின. ஆனால் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இந்தப் பிரச்சனை இருக்கவில்லை.
வானில் இருந்த விமானி தரைக்கு கூறும் ரேடியோச் செய்திகளும் தெளிவாகக் கேட்டன. அதுமாத்திரமல்ல, வானில் இருந்த ஐந்து விமானங்களிலிருந்து ஐந்து விமானிகளும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டே உரையாடல்கள்கூட தரையில் இருந்தவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது.
விமானிகளின் உரையாடல்களின்படி அவர்களது விமானங்கள் எல்லாவற்றிலும் இருந்த கன்ட்ரோல் உபகரணங்கள் சரியாக இயங்கவில்ல. ஏறுமாறான தரவுகளைக் காட்டின. அத்துடன் திசைகாட்டும் கம்பாஸ் கருவி முழுமையாகவே இயங்காது போய்விட்டிருந்தது.
விமானிகளின் குரல்களில் ஆரம்பத்தில் குழப்பம் தெரிந்தது. சிறிது சிறிதாக அந்தக குழப்பம் பயமாக மாறத் தொடங்குவது தெரிந்தது.
இதற்கிடையே விஷயம் தரையிலுள்ள மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் பலர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்து விட்டார்கள்.
அத்துடன் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களும் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அழைக்கப்பட்டார்கள். காரணம், தரையில் இருந்தபடியே ரேடியோ மூலமாக பயிற்சியாளர்களால், விமானம் இயக்குவது பற்றிய அறிவுறுத்தல்களை விமானிகளுக்கு தெரிவிக்கமுடியும்.
வந்திருந்த பயிற்சியாளர்கள் பல வருடங்களாக விமானிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள். புதிய விமானிகள் பயிற்சிக்காகப் பறக்கும்போது அவர்களுடன் பலதடவைகள் கூடவே பறந்தவர்கள். அத்துடன் அவர்களே எத்தனையோ தடவைகள் பர்மியூடா முக்கோணப் பகுதிக்கு மேலாக பறந்திருந்தவர்கள். அந்த வான் பகுதியை நன்றாக அறிந்திருந்தவர்கள்.
5 விமானிகளும் தமக்கிடையே பதட்டமாக பேசிக் கொண்டதை, கீழேயிருந்த பயிற்சியார்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சுக்களில் இருந்து ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள முயன்றார்கள்.
“உங்களது திசைகாட்டும் கருவியின் வாசிப்பு எப்படி இருக்கிறது? திசை தெரிகிறா?” ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் கேட்கிறார்.
“கருவி இயங்கவில்லை. தென்கிழக்குத் திசையில் அசையாமல் நிற்கிறது.”
“கடைசியாக திசைகாட்டும் கருவி எப்போது இயங்கியது என்பது ஞாபகம் இருக்கிறதா?”
“ஆம். கடைசியாக பகாமாஸ் தீவின் மேல் சிக்கன் ஷோவால்ஸ் பகுதி வான்பரப்பில் வைத்து விமானத்தை வடக்கு நோக்கித் திருப்பினேன். அப்போது திசைகாட்டும் கருவி சரியாக இயங்கியது.”
“அதன் பின்னர் இயங்கவில்லையா?”
“இல்லை”
“எனது விமானமும் அப்படித்தான்” என்றார் மூன்றாவது விமானி ஒருவர்.
“அப்படியானால் அந்தக் கடைசி திருப்பலில்தான் எங்கோ தவறு இருக்கிறது.”
இதைத் தரையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர், தனது அனுபவத்தை வைத்து ஒரு விஷத்தை ரேடியோ மூலம் விமானிகளுக்கு தெரிவித்தார்.
“பகாமாஸ் தீவிலிருந்து நீங்கள் வடக்கே 90 டிகிரி திருப்பியிருப்பீர்கள். காற்றின் வேகமோ அல்லது வேறு ஏதாவதோ உங்களது விமானங்களை சில டிகிரிகள் இடதுபுறமோ வலதுபுறமோ திருப்பி விட்டிருக்கலாம்.”
“சொல்லுங்கள். கேட்டுக்கொண்டிருக்கிறோம். சற்று உரத்த குரலில் கூறுங்கள். ரேடியோ தெளிவில்லை.”
“இப்போது உங்களது விமானங்கள் பகாமாஸ் தீவில் இருந்து வட-மேற்குத் திசையிலே அல்லது வட-கிழக்குத் திசையிலோ சென்று கொண்டிருக்கலாம்.”
“சாத்தியம்தான்”
“அப்படியானால் உங்கள் விமானம், அமெரிக்கக் கரையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது. விமானங்களை 180 டிகிரி திருப்ப முடியுமா என்று பாருங்கள். அப்படி திருப்பினால், நீங்கள் புளோரிடாவின் தென் முனையிலுள்ள சிறிய தீவுகளை நோக்கி வர தொடங்குவீர்கள்.”
விமானங்கள் திருப்பப்பட்டன. சிறிது தூரம் பறந்தன.
இப்போது ரேடியோவில் மீண்டும் சார்ள்ஸ் டெயிலரின் குரல் கேட்டது.
“எங்களுக்கு கீழே ஒரேயொரு ஒற்றைத்தீவு தெரிகிறது. இப்போது அதையும் கடந்து செல்கிறோம். அதைத்தவிர வேறு எந்த நிலப்பகுதியும் கீழே தெரியவில்லை.”
டெயிலரின் இந்தக் கூற்றிலிருந்து ஒரு விஷயத்தை தரையில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அந்த விஷயம்–
விமானங்கள் அமெரிக்கக் கரையை நோக்கி வரவில்லை.
காரணம், அமெரிக்க கரையை நோக்கி வந்தால், புளோரிடாவுக்கு அருகில் பல சிறு சிறு தீவுகள் இருக்கின்றன. அவை கண்களில் தட்டுப்பட்டிருக்கும். கீழே தெரிந்தது ஒரேயொரு ஒற்றைத் தீவு என்றால், விமானங்கள் வேறு ஏதோ திசையில் செல்கின்றன.

ஆனால அது எந்த திசை?
சரியாக மாலை 4 மணிக்கு விமானிகளிடையே நடைபெற்ற ஒரு உரையாடல், கீழேயிருந்தவர்கள் அதிர்ச்சியடைய வைத்தது.
அதுவரை அந்த ஐந்து விமானங்களுக்கும தலைமை கமாண்ட் விமானியாக இருந்த லெப்டினென்ட் சார்ள்ஸ் டெயிலர், அந்தப் பொறுப்பை மற்றொரு விமானியிடம் ஒப்படைத்துவிட்டார்.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது?
விமானிகளிடையே மிக மிக அவமானத்துக்குரிய ஒரு விஷயமாகக் கருதப்படுவது இந்தச் செய்கை. விமானிகள் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை கமாண்ட் அதிகாரியாக நியமிக்கப்படுவது என்பது, பதவிக்கும் அனுபவத்துக்கும் கொடுக்கப்படும் கௌரவம்.
அப்படிக் கொடுக்கப்பட்ட பொறுப்பை ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் ஒப்படைக்கிறார் என்றால், ஒன்று அவர் மிக மோசமாக காயமடைந்து செயலிழந்திருக்க வேண்டும். அல்லது, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, தன்னால் சரியாக நிறைவேற்ற முடியாது என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
சார்ள்ஸ் டெயிலர் மனத்தளவில் பெரிதும் சோர்வடைந்து விட்டார் என்று தரையில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். விமானம் எங்கே இருக்கிறது, எந்தத் திசையில் செல்கிறது என்று எதுவுமே தெரியாத நிலையில், விமானிகளுக்கு ஏற்படக்கூடிய சோர்வு இது.
இதனால் அவரால் மற்றயவர்களுக்கு கமாண்ட் கொடுக்க முடியாது. வேண்டுமானால் மற்றயவர்களது அறிவுறுத்தல்களை செயல்படுத்த முயற்சிக்கலாம்.
டெயிலரால் பொறுப்பு கொடுக்கப்பட்ட விமானியின் பெயர், கேப்டன் ஸ்டீவர்.
சில நிமிடங்களில கேப்டன் ஸ்டீவரின் குரல், தரைக்கட்டுப்பாட்டு மைய ரேடியோவில் ஒலித்தது.
“எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.
விமானம் பறந்து கொண்டிருந்த இடத்தை நிஜமாகவே அவர் புரிந்து கொண்டாரா?
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக