வியாழன், 27 செப்டம்பர், 2012

சகோதர யுத்தத்தை’ பார்த்ததே இல்லையா? இங்கே பாருங்கள்!


 

“லிபியாவில் அரசு ராணுவத்தின் அங்கீகாரம் பெற்றிராத அனைத்து தீவிரவாத அமைப்புகளும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் தத்தமது முகாம்களை காலி செய்துகொண்டு, ஆயுதங்களையும்  ராணுவத்திடம்  ஒப்படைக்க வேண்டும்”  இந்த அறிவிப்பு  லிபியா  ஜனாதிபதி  மொஹாமெட்   எல்-மெகாரெஃப்பிடம் இருந்து வந்துள்ளது.
அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் லிபியாவின் பென்காசி நகரில்தான் முதலில் ஆரம்பமாகியது. அதன் பின்னணியில், சில தீவிரவாத அமைப்புகள் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. அது உண்மைதான் என்பதும், உளவு வட்டாரத் தகவல்களில் இருந்து தெரியவருகிறது. தீவிரவாத அமைப்புகளை அந்த நாட்டுக்குள் இயங்க விடக்கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
லிபிய அரசு, தீவிரவாத இயக்கங்களை இந்த காரணத்தை வைத்துக் கொண்டு அப்புறப்படுத்திவிட நினைக்கிறது.
லிபிய அரசு, இந்த இயக்கங்களை அப்புறப்படுத்துவதற்கு வேறு காரணங்களும் உள்ளன. முக்கியமாக காரணங்களில் ஒன்று இந்த இயக்கங்கள் தமக்கிடையே போட்டுக்கொள்ளும் சண்டைகள். சண்டையென்றால், சும்மா கைகலப்புகள் அல்ல. இவர்கள் பீரங்கிகளாலேயே சுட்டுக் கொள்கிறார்கள். அந்தளவுக்கு ஆயுதங்களும் அவர்களிடம் உள்ளன.

80களின் இறுதியில், இலங்கையில் ஈழவிடுதலை இயக்கங்கள் தமக்கிடையே மோதிக்கொண்டன. டெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் இலங்கையிலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் தலைவர் பத்மநாபா சென்னையிலும் கொல்லப்பட்டனர். அந்த அமைப்புகளின் உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
அதைப்பற்றி இப்போது கிளறுவதில் அர்த்தமில்லை. காரணம், அவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் கொல்வதற்கு உத்தரவிட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள். சகல இயக்கங்களும், பேப்பரிலும், சில அபிமானிகளின் கற்பனையிலும்தான் உள்ளன. அதனால் ஏதும் பாதகம் இல்லை.
கருணாநிதி கூறும் ‘சகோதர யுத்தம்’ யாழ்ப்பாணத்தில் உச்சக்கட்டத்தில் நடந்தபோது, உங்களில் எத்தனைபேர் நேரில் பார்த்திருப்பீர்களோ தெரியாது. சக ஈழவிடுதலை இயக்கப் போராளிகளை, வீதியில் உயிருடன் டயர் போட்டு எரித்த கதைகளும் உங்களுக்கு தெரிந்திருக்குமோ தெரியாது.
எல்லாமே Every action has an equal reaction என்ற வகையில் முடியும் என்று முடிந்து விட்டன.
முடிந்த கதையை விடுங்கள். நடக்கும் கதைக்கு வருவோம். தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய ‘சகோதர யுத்தத்தை’ யாழ்ப்பாணத்தில் பார்க்க தவறியிருந்தால், இப்போது லிபியாவில் பார்க்கலாம்.
லிபியாவில் பெரிதும், சிறிதுமாக பல தீவிரவாத அமைப்புகள் வெளிப்படையாக இயங்குகின்றன. முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு எதிரான புரட்சியில், இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக போராடித்தான் வெற்றி பெற்றிருந்தன.
யுத்தம் நடைபெற்றபோது, இந்த தீவிரவாத இயக்கங்கள் தத்தமது பலத்துக்கு தக்கபடி, கடாபி ஆதரவு ராணுவத்தின் ராணுவ முகாம்களை கைப்பற்றின. அங்கிருந்த ராணுவத்தினரை கொன்றுவிட்டு, தமது தீவிரவாத இயக்கங்களில் முகாம்களாக இந்த ராணுவ முகாம்களை மாற்றிக் கொண்டன.
கடாபி ஆதரவு ராணுவத்துக்கு எதிரான யுத்தம் வெற்றி பெற்றபின், யுத்தத்தில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புகள் அனைத்தும், சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் மக்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. ‘நம்ம பையன்கள்’ என்று மக்களும், தீவிரவாத அமைப்பினரும் நெருக்கமாக இருந்தனர்.
ஆனால், சுதந்திரமாக அலுவலகம் எல்லாம் வைத்துக் கொண்டு இயங்கிய இவர்களுக்கு இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படவே, தொடங்கியது சகோதர யுத்தம். இந்த போட்டோ தொகுப்பில், அந்த சகோதர யுத்தத்தின் நிஜ பரிமாணங்களை நீங்கள் பார்க்க போகிறீர்கள்.
ஒரு எச்சரிக்கை. ஒவ்வொரு போட்டோவுக்கும் நாம் எழுதும் குறிப்புகள், உங்களுக்கு ஈழ விடுதலை இயக்கங்களை ஞாபகப் படுத்தினால், அது உங்க சமாச்சாரம். நாம் லிபியா போராளி இயக்கங்கள் இடையே தற்போது நடைபெறும் ‘சகோதர யுத்தம் பற்றியே எழுதுகிறோம். இந்த போட்டோக்களில் பலவற்றில் கூறப்படுபவை அந்த நாளைய ‘நம்ம பையன்களை’ ஞாபகப்படுத்தினால், அது coincidence என்றுதான் நாம் சொல்வோம்.
இதோ, கீழேயுள்ள போட்டோவில், ரஃபல்லா சகாத்தி (Rafallah Sahati) இயக்கத்தினர், எதிர் இயக்கத்தினர் தாக்குதல் தொடுக்க வருவார்கள் என்று எதிர்பார்த்து தயாராக அமர்ந்திருக்கிறார்கள். எதிர் இயக்கத்தினர் இன்னமும் வந்து சேரவில்லை. பார்த்துவிட்டு அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
அன்சார் அல்-ஷாரியா (Ansar al-Sharia) இயக்கத்தினர் மீது ரஃபல்லா அல்-சிகாத்தி இயக்கத்தினர் தாக்குதல் தொடுக்க போகிறார்கள் என்ற பேச்சு முதலில் அடிபட்டது. அவர்களை தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன், அன்சார் அல்-ஷாரியா இயக்கத்தினர் நிலைமையை அவதானிக்கிறார்கள்.
இவர்கள் சகோதர யுத்தம் புரிவது வெறும் கைகலப்பு அல்ல என்று சொன்னோம். பாருங்கள், இவர்களிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள்கூட உள்ளன. விமானம்தான் இல்லை.
இது லிபிய ராணுவம். தீவிரவாத இயக்கங்களின் சண்டை உச்சத்துக்கு போகவே, ராணுவம், ரஃபல்லா அல்-சிகாத்தி இயக்கத்தினரின் முகாம்களை முற்றுகையிட்டது. இன்று மாலைக்குள் இயக்கங்கள் முகாம்களை காலி செய்யாவிட்டால், இவர்கள் காலி செய்ய வைக்க வேண்டும்.

லிபியாவின் வீதிகளில் அரசு ராணுவத்தினரையும் காணலாம், தீவிரவாத இயக்கத்தினரையும் காணலாம். சீருடைகள்தான் வேறு. ஒவ்வொரு ஏரியாவில் ஒவ்வொரு இயக்கம் மக்களிடம் இருந்து வரி வசூலித்து கொள்வார்கள். பாதுகாப்பு நிதி என்பது, அதன் பெயர். பணமாக கொடுக்க முடியாதவர்களிடம் இருந்து தங்கம் பெறப்படும்.
எதிர் இயக்கத்தின் முகாமுக்குள் நுழைவதற்கு முன், இது போன்ற தாக்குதல் நடத்தி, ‘கிளியர்’ செய்துவிட்டே செல்வார்கள். இந்த யுத்தங்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு கணக்கு யாரிடமும் கிடையாது.
எதிர் இயக்க முகாம் மீது தாக்குதல் நடக்கிறது. இரு தரப்பினரும், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே கடாபிக்கு எதிராக போராடிய போராளிகள். சுருக்கமாக சொன்னால், கருணாநிதி கூறிய, “சகோதர யுத்தம்” இதுதான்.
தமது முகாம் தாக்கப்பட, அங்கிருந்து தப்பிச் செல்லும் ரஃபல்லா அல்-சிகாத்தி இயக்கத்தினர். பென்காசி நகரம் பற்றி நன்றாக அறிந்தவர்கள் மறைவிடங்களுக்கு தப்பித்து சென்று விடுவார்கள். வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்த போராளிகளே, இடம் தெரியாமல் எதிரணியிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
சிக்கிக் கொண்டால், என்னாகும் என்று சொல்ல தேவையில்லை அல்லவா?
அல்-சிகாத்தி இயக்கத்தினரின் முகாம்களை மூடுமாறு போலீஸ் கேட்டுக்கொண்டபோது, போலீஸூடன் வாதம் செய்யும் இயக்க உறுப்பினர்கள். “நீங்கள் உயிர் தப்ப வேண்டுமென்றால், இயக்கத்தை கலைத்துவிட்டு போய்விடுங்கள்” என்பதே போலீஸின் அட்வைஸ்.
ஒரு இயக்கம் மற்றைய இயக்கத்தின் முகாமை தாக்கும்போது, தாக்கும் இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெளியே நின்று உற்சாகப்படுத்துகிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாற்று இயக்க கொலைகள் நடந்தபோது, ஆதரவாளர்கள் கோகோகோலா கொடுத்து உற்சாகப்படுத்தவில்லையா? அதுபோலதான் இதுவும். அவரவருக்கு, அவரவர் நியாயங்கள் அல்லது காரணங்கள் இருக்கலாம்.
தாக்குதலால் முகாமை விட்டு தப்பியோடிய ரஃபல்லா அல்-சிகாத்தி இயக்கத்தினர் விட்டுச் சென்ற வாகனங்கள் எரிக்கப்பட்டன. வாகனங்கள், மக்களிடம் இருந்து, ‘பாதுகாப்பு தேவைகளுக்காக’ என்று பெறப்பட்டவைதானே… எனவே இயக்கத்துக்கு இதனால் நஷ்டமில்லை.
ஒரு முகாம் தாக்கப்பட்டதுமே, மற்றைய முகாமில் உள்ளவர்கள் ‘எதற்கும் தயாராக’ ஆயுத பாணிகளாக இருந்தார்கள். ஜீவ மரண போராட்டம் இது.
முகாம் தாக்கப்படும்போது, தப்பிச் செல்லும் மாற்று இயக்க போராளிகளை சுட்டுக் கொல்லவும், ஏற்பாடுகள் பக்காவாக செய்யப்பட்டு இருந்தன. யாரையும் வடக்கூடாது. விட்டால், நாளைக்கே பழிவாங்க வரலாம் அல்லவா?
இது அரசு ராணுவம். இரு தரப்பு சண்டையில் இவர்கள் நேரடியாக கலந்துகொள்ளவில்லை. ஆனால், இவர்களும் தயாராகவே உள்ளார்கள்.
இது தாக்குதலுக்கு செல்லும் அணி. மாற்று இயக்கத்தின் எந்த முகாமை தாக்க வேண்டும் என்ற உத்தரவு கொடுக்கப்பட்டதும், இவர்கள் புறப்படுவார்கள், சகோதர வேட்டைக்கு!
அன்சார் அல்-ஷாரியா இயக்கத்தினரின் கட்டுபாட்டில் இருந்த வைத்தியசாலை இது. காவலுக்கு நின்ற அவர்கள் ஓடிவிட, தற்போது லிபியா அரசு பாதுகாப்பு படைகள் வைத்தியசாலையை பொறுப்பேற்று கொண்டுள்ளனர்.
அவர்கள் அரசு ராணுவத்தினர். அன்சார் அல்-ஷாரியா இயக்கத்தினரின் முகாம் ஒன்றுக்கு வெளியே சும்மா காத்திருக்கிறார்கள் இவர்கள். தப்பியோடும் இயக்கத்தினர், ஆயுதங்களை வீசிவிட்டு இவர்களிடம் வந்தால், பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் நடப்பதாக தகவல் இல்லை.
இவர்கள் நேரடி இயக்கத்தினர் அல்ல. அவர்களது ஆதரவாளர்கள். ஒரு முகாம் தாக்கப்பட்டபின், தப்பியோடியவர்கள் விட்டுச் சென்ற துப்பாக்கிகளை இவர்கள் சேகரித்து கொள்கின்றனர்.
தாக்குதல் நடக்கும் பகுதிகளில் நின்று வேடிக்கை பார்க்கும் ராணுவம் மற்றும் போலீஸ். “இயக்கங்கள் சண்டையிடும்போது நீங்கள் தேவையில்லாமல் போய் உயிரை விட வேண்டாம். அவர்கள் தங்களுக்கு இடையே சண்டையிட்டு அழிந்து போவார்கள். நீங்கள் சும்மா வேடிக்கை பார்த்தால் போதுமானது” என்று இவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.
இரவில் நடைபெற்ற தாக்குதல் இது. இரண்டு முகாம்கள் முற்றாக தாக்கி அழிக்கப்பட்ட இரவில், வெற்றி சைகை காட்டும் ஒரு போராளி! யாரை வெற்றி கொண்டார் என்பதே கேள்வி!
முகாமுக்கு வெளியே வெடிப்பொருள் நிரப்பப்பட்டு நின்றிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
எதிர் இயக்கத்தினரின் கார் எரிவதை நோட்டமிடும் ஒருவர். இந்த சம்பவத்துடன் அங்கு காட்சி மாறியது. அதுதான், கிளைமாக்ஸ்.
லிபிய மக்களில் பெரும்பாலானோர், இந்த இயக்கங்களுக்கு எதிராக திரும்பினர். மக்கள் பெரும் எண்ணிக்கையில், போராளி முகாம்களுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். போராளிகளை ஓடஓட துரத்தினார்கள். அந்தளவுக்கு இவர்களது சண்டைகளால் மக்கள் நொந்துபோய் விட்டனர்.
மக்கள் சக்தி இயக்கங்களுக்கு எதிராக திரும்பியதுதான், கிளைமாக்ஸ்!
‘நம்ம பையன்கள்’ என்று முன்பு அன்பு செலுத்திய மக்களே, இயக்கத்தினரின் இரு முகாம்களுக்கு தீ வைத்தனர். மீண்டும் தமது ஏரியா பக்கம் வரக்கூடாது என்று அடித்து துரத்தினர். இரு இயக்கத்தினரும் மக்களிடம் அடி வாங்கினர்
இரவில் இந்த தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்க, இயக்கத்தினரை தாக்க செல்லாத மக்கள், மின்கம்பங்களில் ஏறி நின்று இயக்கத்தினர் தப்பி ஓடுவதை வேடிக்கை பார்த்தனர்.
அவசர அவசரமாக பென்காசி நகரை காலி செய்துகொண்டு ஓடித் தப்பும் இயக்கத்தினர். மக்கள் சக்திக்கு முன், இவர்களது துப்பாக்கிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

அது ராணுவத்தினர். “மக்கள் மீது தாக்கினால், திருப்பி தாக்குவோம்” என ராணுவம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டிருந்தது. தப்பியோடிய இயக்கத்தினர் மக்களை தாக்காமல் சென்றதற்கு அதுவும் ஒரு காரணம்
மக்களின் வெறுப்பு போராளிகள் மீது திரும்பியது, இஸ்லாமை இழிவுபடுத்திய திரைப்படத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களிலும் தெரிந்தது. மதத்தை இழிவுபடுத்தியதை எதிர்க்கும் மக்கள், தீவிரவாத இயக்கங்களையும் சேர்த்தே எதிர்ப்பதை பாருங்கள்.
எங்கே போவது என்று அறியாமல் திகைத்து நிற்கும் முன்னாள ஹீரோக்கள்.
இவர்கள் இல்லாவிட்டால், கடாபி ராணுவத்தை வெற்றி கொண்டிருக்க முடியாது. லிபியாவில் கடாபி ஆட்சியை ஒழித்திருக்கவும் முடியாது. அப்போது யுத்தம்புரிந்து மக்களிடம் பெற்ற நற்பெயரை நாசம் செய்து, தமக்கு தாமே அழிவை தேடிக் கொண்டார்கள் இவர்கள்… கருணாநிதி குறிப்பிட்ட சகோதரச் சண்டையால்!
நீயா, நானா பெரியவன் என்ற போட்டியில், கடைசியில் யாரும் ஜெயிக்கவில்லை
சந்தேகம் இல்லாமல் ஜெயித்தது இவர்கள்தான்! பொதுமக்கள். இயக்கங்கள் தமக்கிடையே யுத்தம் புரிந்தபோது, அதற்கான காரணத்தை சரியாக புரிந்துகொண்டு கிளைமாக்ஸ் கொடுத்தார்களே… அதுதான் வெற்றி.
தற்போது பென்காசி நகரில் இருந்து அன்சார் அல்-ஷாரியா இயக்கத்தினர் முற்று முழுதாக வெளியேறி விட்டனர். ரஃபல்லா அல்-சிகாத்தி இயக்கத்தினரில் இரு முகாம்கள் மீதமுள்ளன. அவற்றின்மீது மக்கள் எப்போது தாக்குவர்களோ, தெரியவில்லை. இவர்களைத் தவிர, வேறு சில சிறிய இயக்கங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் கலைத்துவிட, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை டயம் கொடுத்திருக்கிறார் லிபிய ஜனாதிபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக