வியாழன், 8 நவம்பர், 2012

ராம்னிக்கு வெள்ளையர்கள்… ஒபாமாவுக்கு ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், ஏழைகள் ஆதரவு!


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பல கூறாக பிரிந்து நின்று வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது. மிட் ராம்னிக்கு அமெரிக்க வெள்ளையர்களும், பணக்காரர்களும் பெரிய அளவில் வாக்களித்துள்ளனர்.
அதேசமயம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முக்கியமாக ஆசியர்கள் பாரக் ஒபாமாவுக்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்து, ராம்னியைக் கவிழ்த்து விட்டு விட்டனர்.

சிந்தாமல் சிதறாமல் வந்த சிறுபான்மை வாக்குகள்

பாரக் ஒபாமாவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிட்டத்தட்ட சிந்தாமல், சிதறாமல் அப்படியே கிடைத்துள்ளது. ஆனால் ராம்னி இங்கு பெரிய அளவில் கோட்டை விட்டு விட்டார். இதுவே அவரது தோல்விக்கு மிக முக்கியக் காரணம்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அமோக ஆதரவு

கருப்பர் இனத்தவரான ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளை கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக அள்ளி விட்டார் ஒபாமா. அதாவது 93 சதவீதம் பேர் ‘நம்மவர்’ என்ற அடிப்படையில் ஒபாமாவை ஆதரித்துள்ளனர். வெறும் 7 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்களே ராம்னியை ஆதரித்துள்ளனர்.

ஆசியர்களின் ஆதரவும் ஒபாமாவுக்கே

அதேபோல இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய இனத்தவரின் ஆதரவும் ஒபாமாவுக்கே அதிகம் கிடைத்துள்ளது. அதாவது 73 சதவீத ஆசியர்களின் வாக்குகளை அள்ளியுள்ளார் ஒபாமா. ராம்னிக்கு 26 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

தென் அமெரிக்கர்களும் ஒபாமாவுக்கே ஆதரவு

ஹிஸ்பானிக் இனத்தவர்கள் எனப்படும் மெக்சிகோ உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களும் பெரும்பாலும் ஒபாமாவுக்கே ஓட்டு போட்டுள்ளனர். 71 சதவீத ஹிஸ்பானியர்கள் ஒபாமாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். 27 சதவீதம் பேரே ராம்னிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

‘ஏழை’ப் பங்காளன் ஒபாமா

50,000 டாலருக்கும் குறைவான வருவாய் கொண்டவர்களும் கூட பெரும்பான்மையாக ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். அதாவது 60 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ராம்னிக்கு 38 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

பணக்காரர்கள் ராம்னி பக்கம்

அதேசமயம், 1 லட்சம் டாலருக்கும் மேல் சம்பாதிப்போரின் ஆதரவு ராம்னிக்கே பெருவாரியாக கிடைத்துள்ளது. 54 சதவீதம் பேர் ராம்னியையும், 44 சதவீதம் பேர் ஒபாமாவையும் ஆதரித்துள்ளனர்.

இளைஞர்களும் ஒபாமா பக்கமே!

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் கூட 60 சதவீதம் ஒபாமாவுக்கே ஆதரவு கொடுத்துள்ளனர். 37 சதவீதம் பேரே ராம்னிக்கு ஆதரவு தந்துள்ளனர்.

பெண்களின் மனம் கவர்ந்த ஒபாமா

அதேபோல 55 சதவீத பெண்களின் வாக்குகள் ஒபாமாவுக்கே கிடைத்துள்ளன. 45 சதவீதம் பேரே ராம்னியை ஆதரித்துள்ளனர்.

ஆண்கள் எல்லாம் ராம்னி பக்கம்

அதேசமயம், ஆண்களின் வாக்குகளை ராம்னி கொத்திக் கொண்டு போய் விட்டார். அதாவது 52 சதவீத ஆண்கள் ராம்னியை ஆதரித்துள்ளனர். ஒபாமாவுக்கு 45 சதவீத ஆதரவே

ஒபாமாவை நிராகரித்த வெள்ளையர்கள்

அமெரிக்க வெள்ளையர்களின் ஆதரவும் கூட ராம்னிக்கே கிடைத்துள்ளது. அதாவது 59 சதவீத ஆதரவு ராம்னிக்கும், 39 சதவீத ஆதரவு ஒபாமாவுக்கும் கிடைத்துள்ளது.

கத்தோலிக்கர்கள் ஒபாமாவுக்கு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதரவு 50 சதவீதம் ஒபாமாவுக்கும், 48 சதவீதம் ராம்னிக்குமாக பிரிந்து போயுள்ளது.

புராடஸ்டன்டுகள் ராம்னிக்கு

அதேசமயம், புராடஸ்டன்ட் பிரிவினரின் வாக்குகளை பெருவாரியாக ராம்னி அள்ளியுள்ளார். அதாவது 57 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. ஒபாமாவுக்கு 42 சதவீத ஆதரவு மட்டுமே.

‘சிட்டி’யெல்லாம் ஒபாமாவுக்கு!

நகர்ப்புற வாக்காளர்கள் ஒபாமா பக்கம் சாய்ந்துள்ளனர்.62 சதவீதம் பேர் ஒபாமாவையும், 36 சதவீதம் பேர் ராம்னியையும் ஆதரித்துள்ளனர்.

‘பட்டி’யெல்லாம் ராம்னிக்கு!

கிராமப்புற வாக்காளர்களை ராம்னி ஈர்த்துள்ளார். அவருக்கு 59 சதவீதம் பேரும், ஒபாமாவுக்கு 39 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக