திங்கள், 14 ஜனவரி, 2013

யாழ்தேவி….. அந்த நாள் நினைவுகள்……!
யாழ்தேவி என்பது  ஒரு காலத்தில்  யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும்  இடையில் போக்குவரத்து  சேவையில் ஈடுபட்ட ரயில் ஆகும். ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் யாழ்தேவி பிணைந்து இருந்தது. வடக்குத் தமிழர்களின் வாழ்வில் ஒன்றாக கலந்து இருந்தது.
ஆனால் 90 ஆம் ஆண்டுக்கு பிந்திய இளைய சந்ததிக்கு   யாழ்தேவி பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. 90 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கான சேவையை யாழ்தேவி நிறுத்த நேர்ந்தது.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுப் பாலமாக யாழ்தேவி இருந்தது. இது ஒரு கடுகதி ரயில்.
இதன் வரலாறும் மிக வேகமானதுதான்.
பிரித்தானியர்  ஆட்சியில்  இலங்கை  இருந்தபோது முதன்முதலாக 1864 ஆம் ஆண்டு ரயில் சேவை இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் 1902 ஆம் ஆண்டுதான் யாழ்ப்பாணத்துக்கு ரயில் வரத் தொடங்கியது. சாமான்களை காவும் குட் ரயிலும், கடிதங்களை கொண்டு வந்து சேர்க்கும் மெயில் ரயிலும் இவற்றில் அடக்கம்.
மெயில்  ரயில் ஆமை வேகத்தில் நகர்ந்து வரும். ஒவ்வொரு புகையிரத்திலும் நின்று கடிதப் பொதிகளை ஏற்றி வரும் என்பதால் இந்நிலை. பின்னேரம் 05.00 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து  புறப்படுகின்ற  மெயில் ரயில் கொழும்பை வந்து  சேர மிக அதிக நேரம்  எடுத்து விடும். இது பிரயாணிகளுக்கு பலத்த எரிச்சலை கொடுத்து வந்தது.
இச்சிரமங்களை   தவிர்க்கின்றமைக்காகத்தான் 1956 ஆம் ஆண்டு யாழ்தேவி ஆரம்பிக்கப்பட்டது. மிக வலுவான எஞ்சின்கள் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டன. இத்ன் முதல் பயணம் மிகவும் உணர்வுபூர்வம் ஆனது. பிரிட்டனிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து எட்டு வருடங்கள். ஆனால் அப்போதே இன முறுகல்கள் முளைத்து விட்டன.
இதனால் இரு  இனங்களுக்கும் இடையில் ஐக்கியத்தையும்,  புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற  அறைகூவலாக யாழ்தேவி   நேர்மையான சிங்கள அரசியல்வாதிகளால் குறிப்பாக இடதுசாரிகளால் பார்க்கப்பட்டது. குறிப்பாக This is Life line of this country என்று யாழ்தேவியின் அறிமுகத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார் முக்கிய இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான பீற்றர் கெனமன்.

யாழ்தேவி தொடங்கப்பட்ட காலத்தில் ரயில் வேயின் பிரதம முகாமையாளராக இருந்தவர் ரம்பல என்பவர். அதன் பின் கே. கனகசபை இப்பதவியில் இருந்தார். இவர் யாழ்தேவியை மெருகூட்டினார். அக்காலத்தில்  ரயில் வேயில் அதிக  வருமானத்தை உழைத்த பெருமையையும் யாழ்தேவி பெற்றது.
இலங்கைப்  பிரதமராக இருந்த தஹநாயக்க யாழ்தேவியில் பயணம் செய்து அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபர் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் வீட்டை வந்தடைந்து உள்ளார். தந்தை செல்வா யாழ்தேவியில் பயணித்துத்தான்   கொழும்பைச் சென்றடைவார்.
கொழும்பில் மதியச் சாப்பாட்டை சாப்பிட்டு யாழ்தேவியில் ஏறினால் இரவுச் சாப்பாட்டை யாழ்ப்பாணத்தில் வீட்டில் சாப்பிடலாம். தென்னிலங்கைக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுச் சென்ற தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வெள்ளிக்கிழமைகளில் திரும்பி வந்து மீண்டும் ஞாயிறு புறப்பட்டு திங்கட்கிழமை வேலைக்கு செல்கின்றமை வழக்கமாக இருந்தது.
 
யாழ்தேவியில் சந்திக்கின்ற இளைஞர்களும், யுவதிகளும் பிரயாண   இடைவெளியில் பேசிப் பழகி, காதல் கொண்டு பின்னர் வீட்டாரின்   சம்மதத்துடன்  திருமணம் செய்து கொண்ட சுவாரஷியங்கள் பல. யாழ்ப்பாணத்தை யாழ்தேவி வந்து அடைந்ததும் முட்டி மோதும் போர்ட்டர்களும், ரக்ஸி ஓட்டுனர்களும், சிற்றுண்டி மற்றும் கடலை வியாபாரிகளும் …. அப்பப்பா எத்தனை பேர். எத்தனையோ  குடும்பங்களுக்கு  இவ்விதம்  வாழ்வாதாரமாகவும்  இருந்தது யாழ்தேவி.
இலங்கையில் இருந்த மற்றய ரயில்களுடன் ஒப்பிடுகையில், யாழ்தேவி பல விதங்களில் வித்தியாசப்பட்டு இருந்தது. பயணிகளுக்கு பரிமாறிய உணவுகள் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகள்.  இவற்றின் தரமும், சுவையும் எப்போது நேர்த்தியாக பேணப்பட்டு வந்தன. யாழ்தேவி கடந்து செல்கின்ற பாதைகளில் பத்து நிமிடங்கள் வரைகூட  கம கம சாப்பாட்டு வாசனை இருக்கும். யாழ்தேவியின் பணியாளர்கள் நேர்த்தியான உடையுடன் காணப்படுவார்கள்.
மற்றய ரயில்களின் பணியாளர்களின் சேவைத் தூரம் அதிக பட்சம் அநுராதபுரம்தான். அதற்கு அப்பால் வேறு பணியாளர்கள் பொறுப்பெடுப்பார்கள். ஆனால் யாழ்தேவியின் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வேலையை கொழும்பில்தான் நிறைவு செய்து கொள்வார்கள். பயணிகளின் தேவைகளை உனர்ந்தது, உடனுக்குடன் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் காணப்பட்டமை ஆச்சரியமான உண்மை.
கொழும்பு கோட்டையில் இருந்த்து புறப்படுகின்ற ரயில் 256 மைல்களைக் கடந்து யாழை அடையும். ராகம, பொல்காவெல, குருநாகல், மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, ஆனையிறவு, யாழ்ப்பாணம் ஆகியவற்றை வந்தடைந்து நிறைவாக கே.கே.எஸ்.என்கிற காங்கேசன்துறையில் பயணத்தை பூர்த்தி செய்யும்.
யாழ்தேவி எஞ்சினின் உறுமல் சத்தம் வலிகாமத்தில் இருந்த வீடுகளுக்கு மிகவும் பரிச்சயமானது.
பிறந்து உள்ள இப்புதிய வருடத்தில் மக்களும், யாழ்தேவியும் பழைய பொலிவைப் பெற்று காங்கேசன்துறை வரை வர வேண்டும் என்பது எமது தூய்மையான விருப்பம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக