வியாழன், 14 மார்ச், 2013

தெரிந்து கொள்வோமா? போப் தேர்தல் நடப்பது எப்படிஉலக  கத்தோலிக்க   கிறிஸ்தவர்களின் தலைவர் போப்  ஆண்டவரை  தேர்ந்தெடுப்பதங்கான  தேர்தல், உலகின் மிகப் பழமையான தேர்தல் நடைமுறைகளுள் ஒன்றாகும்.
இந்த தேர்தல் எப்படி நடைபெறுகிறது? போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கும் விதிமுறைகளின்படி, கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் எந்த ஒரு ஆணும், போப் ஆண்டவராக ஆக முடியும். ஆனால், கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக சாதாரண கத்தோலிக்கர், போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படவில்லை. வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தின் இளவரசர்களாகக் கருதப்படும் கார்டினல்கள் மட்டுமே போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது.
போப் ஆவது அவ்வளவு எளிதல்ல: சாதாரண கத்தோலிக்க ஆண், கார்டினல் அந்தஸ்தைப் பெற வேண்டுமானால் பல படிநிலைகளைக் கடக்க வேண்டும். முதலில் குருவானவராகவும், பின்னர் ஆயராகவும் ஆனால்தான், கார்டினல் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு தகுதி பெற முடியும்.
குருவானவராவதற்கு, இளநிலை இறையியல், முதுநிலை பட்டங்களை பெற வேண்டும். இதன் பிறகு தேவாலயத்தில் பொறுப்பு வகிக்க வேண்டும். தற்போதைய கணக்குப்படி உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான குருவானவர்கள் இருக்கின்றனர்.
கார்டினல்கள் யார்? குருவானவர் குறைந்தது 5 ஆண்டுகள் தேவாலயப் பணியை மேற்கொண்டு, இறையியல் ஆய்வுப் பட்டம் பெற்றால், பிஷப் அல்லது ஆயர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு பரிசீலிக்கப்படுவார். இதற்கு போப்பாண்டவருடைய ஒப்புதல் அவசியம். ஆயர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர்கள், மறைமாவட்டத்தின் தலைமைப் பதவியை வகிப்பார்கள். இந்த வகையில், உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் ஆயர்களாக இருக்கிறார்கள்.
ஆயர்களிலிருந்து சில சிக்கலான பிரத்யேக நடைமுறைகள் மூலமாகவும், போப்பின் முழு விருப்பத்தின் அடிப்படையிலும் கார்டினல்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள 125 கோடி கத்தோலிக்க மக்களில் 207 பேர்தான் கார்டினல்கள் என்பதிலிருந்து அவர்களுடைய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
வாக்களிக்க வயதும் முக்கியம்: இந்தக் கார்டினல்களில்   80 வயதுக்குக் குறைவானவர்கள் மட்டுமே   போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிக்க முடியும். இப்போது நடக்கும் தேர்தலில்  மொத்தம் 1 17 கார்டினல்கள்  வாக்களிக்கப்பதற்குத்  தகுதி   பெற்றிருந்தாலும், அவர்களில்   இருவர் வெவ்வேறு  காரணங்களுக்காக  வாடிகனுக்கு வரவில்லை.
இந்த 115 கார்டினல்களில் 10 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, ஓசியானாவைச் சேர்ந்த ஒருவரும், இத்தலியைச் சேர்ந்த 28 பேரும், பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 32 பேரும், வட அமெரிக்காவைச் சேர்ந்த 13 பேரும், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 20 பேரும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 11 பேரும் போப் தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.
புகைப் போக்கி சொல்லும் கதை: இவர்கள் அனைவரும் வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் உள்ள சிஸ்டேன் சேபல் என்ற அறையில் கூடி, தேர்தல் நடைமுறையத் தொடங்குகிறார்கள்.
இந்த நடைமுறையின்போது, செல்போன் உள்ளிட்ட எந்த தொலைத் தொடர்பு சாதனத்தையும் அந்த அறைக்குள் கொண்டு செல்ல முடியாது. அந்த அளவுக்கு தேர்தல் நடைமுறைகள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.
ஒரு வாக்குச் சீட்டில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை கார்டினல்கள் எழுத வேண்டும். அந்த வகையில், 3-ல் இரு பங்கு வாக்கைப் பெறும் கார்டினலே போப் ஆண்டவராக அறிவிக்கப்படுவார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அந்த வாக்குச் சீட்டுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, ஒரு வேதிப்பொருளுடன் சேர்த்து எரிக்கப்படும்.
அப்போது, அந்த அறையின் மேலுள்ள புகைப் போக்கியின் வழியாக கரும்புகை வெளியேறும். மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும். யாராவது ஒருவருக்கு 3-ல் இரு பங்கு வாக்குக் கிடைக்கவில்லை எனில் மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும். 30 முறை தொடர்ந்து யாருக்கும் தேவையான வாக்குகள் கிடைக்காவிட்டால், 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால் வெற்றி என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு தொடரும்.
ரகசியமாய் நடைபெறும் தேர்தல்: போப்பாண்டவர் தேர்வு செய்யப்பட்டால், வாக்குச் சீட்டுகள் மட்டும் எரிக்கப்பட்டு, புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியேற்றப்படும்.இதைத் தொடர்ந்து போப்பாண்டவராகத் தேர்வு செய்யப்பட்டவர், உலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக